முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியல் பிழைத்தோர் - 1

Democracy vs Dictatorship

'21ம் நூற்றாண்டில் பிறந்து, இந்த தேர்தலில், நாட்டின் ஜனநாயக வழிமுறைகளில் முதன்முதலாக பங்கெடுக்கப் போகும் இளம் நண்பர்களே, உங்கள் வாக்குகளை உயர்ந்த இலட்சியங்களுக்காக பயன்படுத்தி இந்த தருணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.' கோவையில் சமீபத்தில் நடைபெற்ற பாஜக வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூடத்தில் இவ்வாறு குறிப்பிட்டது நம் பிரதமர் நரேந்திர மோடி. இதனை வாசித்து விட்டு அப்படியே கடந்து போகாமல் மீண்டும் இந்த வாசகத்தை பொறுமையாக வாசிக்கிறேன். உண்மையில் பிரதமர் மோடி ஒரு மகோன்னதமான கருத்தை இளைஞர்களுக்கு தன் பேச்சில் கூறியுள்ளார். ஆம்... இன்றைய நிலையில் அப்படி ஒரு உயர்ந்த இலட்சியம் என்றால் அது மற்றுமொரு பாஜக ஆட்சி அமையாமலும் அதன் பிரதமராக மோடி வராமலும் பார்த்துக்கொள்வது தான் என்பதை முதல்முறை வாக்களிக்க போகும் 3.5 கோடி வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் மீண்டுமொரு பாஜக ஆட்சி அமைந்தால் இதுவே அந்த இளைஞர்கள் வாக்களிக்கும் கடைசி தேர்தலாக மாறும் அபாயம் கூட அதில் உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கான 17வது மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் தனிப்பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் வெற்றிபெறுமா அல்லது எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம்(Hung Parliament) அமையுமா என்பது தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னரே முடிவாகும். ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களை விடவும் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றொரு வகையில் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும்(Democracy), சர்வாதிகாரத்திற்குமான(Dictatorship) யுத்தமாக அனுக வேண்டியுள்ளது. இதற்கான காரணம் கடந்த ஐந்து வருடங்களில் பாஜக ஆட்சியில் நடந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அடங்கியிருக்கிறது. 90களில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு இந்தியாவில் நெருக்கடி நிலையை(Emergency) பிரகடனப்படுத்தியபோது ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் அப்போது ஜனநாயகத்திற்கும் அது வழங்கும் கருத்துரிமைக்கும் ஏற்பட்ட அச்சுறுதலை பற்றியெல்லாம் அதனைப்பற்றிய பதிவுகளின் வழியாகவும், பிறர் சொல்லக் கேட்டும்தான் தெரிந்தது என்றால், கண் கூடாக அதனை கடந்த 5 வருடங்களில் அனுபவிக்க நேரிட்டது  எனலாம். அப்படியொரு அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி காலமாக தான் பாஜகவின் கடந்த ஐந்து வருட ஆட்சி இருந்தது.

இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளை இவர்கள் தலைமையகமான ஆர்எஸ்எஸ் மற்றும் இதர இந்துத்துவ அமைப்புகள் எந்த விதத்தில் எதிர்கொண்டுள்ளது என்பதை தொடர்ச்சியாக நாம் வரலாற்றின் பக்கங்களில் தேட வேண்டும். அது மகாத்மா காந்தியின் கொலையிலிருந்து தொடங்கி பத்திரிக்கையாளர் கவுரி இலங்கேஷ் கொலைசெய்யப்பட்டது வரை நீள்கிறது. இதில் தொடர்ந்து இவர்கள் விதைக்கும் நச்சுக் கருத்துகளுக்கு எதிராக விமர்சித்தும் ஆய்வுப்பூர்வமாகவும் பேசியும் எழுதியும் வந்த நரேந்திர தாபோல்கர், இடதுசாரி இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் கோவிந்த் பன்சாரே, கன்னடம் திராவிட மொழிக்குடும்பத்திற்குள் உள்ளது என்றும், அதன் அடித்தளம்  சமஸ்கிருத மொழி இல்லையென்றும், மதங்களுக்கு அப்பாற்பட்டது கன்னட மொழி என்று ஆய்வுப்பூர்வமாக எழுதி வந்த பேராசிரியர் கல்புர்கி, தொடர்ந்து இந்துத்துவ அமைப்பின் பொய்ப் பிரச்சாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர் கவுரி இலங்கேஷ் என்று இவர்கள் அனைவரையும் கொடூரமாக கொலை செய்தவர்கள் இந்துத்துவ அமைப்பினர். இவர்களுக்கும் பாஜகவிற்கும் இருக்கும் சம்மந்தம் என்னவென்றால் இந்த தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் மென்மையான அரசியல் முகம்தான் பாஜக. கடந்த ஐந்து வருடங்களில் இந்தியா முழுவதும் சமூக செயற்பாட்டாளர்களின் மீதான அரசின் அடக்குமுறை அதிகரித்துள்ளதை வைத்து இதை உறுதிசெய்யலாம். சமீபத்தில் வெவ்வேறு மாநிலங்களில் செயல்படும் 5 சமூக செயற்பாட்டாளர்களை ஒரே நேரத்தில் கைது செய்தது இந்த மஹாராஷ்டிர மாநில பாஜக அரசு. மஹாராஷ்டிரத்தில் நடந்த கலவரத்தில் தொடர்புடையதாக பொய் குற்றச்சாட்டினை கூறி இவர்களை கைது செய்தது. இந்த அரசின் செயல்பாடுகளை விமர்சித்தாலோ அல்லது இவர்களின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டாலோ அவர்களை தேசத்திற்கே எதிரானவர்கள் என்றும், சமூக விரோதிகள் என்றும், அர்பன் நக்சல்கள் என்றும் மோசமான வகையில் அடையாளப்படுத்தி வருகின்றனர். இவர்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் கூட இவர்கள் வெவ்வேறு வகையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்.

தமிழகத்தில் இவர்கள் எந்தவித செல்வாக்கும் இல்லாமல் கொல்லைப்புறம் வழியாக அரசியலில் எப்படி உள்ளே வர முயல்கிறார்கள் என்பதை நாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு பார்த்து வருகிறோம். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக மத்திய ஆட்சியின் மூலம் பல வழிகளில் மிரட்டியும் அடிபணிய வைத்தும் தங்கள் காரியங்களை சாதித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களை வைத்தும் இங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். மேலும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, உளவுத் துறை, சுங்கம் மற்றும் கலால் வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறை, போன்ற அத்தனை ஜனநாயக அமைப்புகளையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் இலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது என்பது கடந்த ஐந்து வருடங்களில் அதன் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட மாநில அரசுகளின் கட்டுமானத்தையே அசைத்துப் பார்க்கும் அளவிற்கான வானளாவிய அதிகாரங்களை மத்திய அரசு இந்த அமைப்புகளுக்கு கொடுக்கிறது. தமிழக அரசின் தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்றால் அந்த சோதனையின் பாதுகாப்பிற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வருகிறது. தமிழக அரசின் தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளரின் அலுவகத்தில் வருமான வரித்துறை நுழைவதை இந்த மாநில அதிமுக அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலை வந்தது. இங்கு தமிழக தலைமை செயலாளர் குற்றத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லையென்றாலும் அதனை ஒரு மத்திய அரசு கையாளும் விதத்தையும் மாநில அரசின் தலைமை செயலகத்தில் அதன் மாண்பை குறைக்கும் விதமாகவும் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் வருமான வரித்துறை என்ற அமைப்பு நுழைவதை கேள்விக்குட்படுத்தாமல் கடந்துவிட முடியாது. இதுமட்டுமல்லாமல் கல்வி, பொது சுகாதாரம், வரிவிதிப்பு, ஆற்றல் வளம் என்று மாநில அரசுகளின் அதிகாரங்களை தொடர்ச்சியாக மத்திய அரசிற்கு எடுத்து செல்லும் கூட்டாட்சிக்கு (Federal) எதிரான போக்கை கடைபிடித்து வரும் இந்த அரசு தொடர்ந்து மாநிலங்களின் அதிகாரங்களில் குறுக்கீடு மட்டுமே செய்துவருகிறது.

இது ஒருபுறமென்றால் பொருளாதார ரீதியிலும் இந்த அரசு எந்த அளவிற்கு திறனற்று தோல்வியுற்று நிற்கிறது என்பதற்கு பணமதிப்பிழப்பு ஒரு உதாரணம். பாஜக அரசு ஊழலுக்கு எதிரான கட்சியாக தங்களை முன்னிறுத்தி வந்தது. ஆனால் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட அரசின் திட்டங்களில் மிகப்பெரிய ஊழல் பணமதிப்பிழப்பின் போதுதான் நடந்தது என்பதை இந்த அரசு மறைகின்றது. இந்த நடவடிக்கை சாமானியர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பொருளாதாரத் தாக்குதல். இது கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்றும், இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு செல்லும் பணத்தை முடக்குவோம் என்றும் சொல்லப்பட்டது எத்தனை வேடிக்கையானது என்பதை நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே பார்த்தோம். இது பணமற்ற பரிவர்த்தனைகளை(Cashless Transactions) ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பின்பு இதே அரசால் கூறப்பட்டது. புழக்கத்தில் இருந்துவந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 15.44 இலட்சம் கோடியை நவம்பர் 08 2016இல் ஒரே அறிவிப்பின் மூலம் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. அதில் 99.3% நோட்டுகள் அதாவது 15.31 இலட்சம் கோடி ரூபாய் வங்கிக்குள் திரும்பிவிட்டது. மீதியுள்ள 0.7% அதாவது 13 ஆயிரம் கோடி தான் கருப்பு பணம் என்றும் இவர்களால் உறுதியாக கூற முடியாது. ஆனால் பணமாக இல்லாமல் அந்த கருப்பு பணத்தின் மூலம் இயங்கிக்கொண்டிருக்கும் கணக்கில் வராத சொத்துகள், பங்குகள், நிலங்கள், தங்கம் போன்றவற்றை துளியளவும் கண்டுகொள்ளாமல் அதற்கான சந்தையை குறிவைக்காமல் சாமானியர்கள் தங்கள் உழைப்பில் சேர்த்து வைத்த சேமிப்பு தொகையை கணக்கிற்குள் கொண்டு வந்து அவர்கள் பரிவர்த்தனைகளை முடக்கி அவர்களை வதைத்து கருப்பு பணத்தை முற்றிலும் ஒழித்துவிட்டதாக விளம்பரம் செய்துகொண்டது இந்த மோடி அரசு. இதில் நடந்த ஊழல் என்பது இப்போது தான் வெளிவர தொடங்கியிருக்கிறது.

இந்திய உளவுத்துறையான R&AW அமைப்பைச் சேர்ந்த ராகுல் ரத்னேக்கர் என்பவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருக்கும் தகவல்கள் திடுக்கிடத்தக்கவை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 08,2016இல் மோடி அரசு அறிவிப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வைத்து புதிய 2000ரூபாய் நோட்டுகளை அமித் ஷா தலைமையில் இந்திய ஒன்றியத்தில் இருக்கிற பல்வேறு துறைகளை சார்ந்த 26பேர் சேர்ந்து அச்சடித்திருக்கிறார்கள். பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபின் பெரிய பெரிய முதலாளிகளிடமிருந்த கருப்பு பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் அச்சடித்த புதிய 2000ரூபாய் நோட்டுகளை கமிஷன் பெற்றுக்கொண்டு வழங்கியிருக்கிறார்கள். இப்படியாக குறைந்தபட்சம் 3லட்சம் கோடி பணத்தை கைமாற்றினோமென்றும் இந்த சதிகளில் முக்கிய பங்காற்றியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இந்த மிகப்பெரிய ஊழலில் இந்திய ஒன்றியத்திலிருக்கிற பல்வேறு துறைகளையும் சட்டத்தை மீறி பயன்படுத்தியிருக்கின்றனர். அதாவது வெளிநாடுகளில் அச்சடித்த பணத்தை இந்திய இராணுவ விமானம் மூலம் டெல்லி எல்லையிலுள்ள ஹிண்டன் என்ற இராணுவ விமான படைதளத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து முதலாளிகளுக்கு விநியோகித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் உச்சபட்ச மோசடி என்னவென்றால் வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் கவர்னர் கையொப்பம் இருக்குமிடத்தில் உர்ஜித் பட்டேல் அவரின் கையெழுத்து இருக்கிறது. ஆனால் அப்போது கவர்னராக இருந்தவர் இரகுராம் ராஜன் ஆவார். உர்ஜித் பட்டேல் பதவியேற்றதே செப்டம்பர் 04,2016 அன்றுதான் ஆனால் புதிய நோட்டு அச்சடித்ததாக சொல்லப்படுவது ஏப்ரல் 2016, ஆக ஆறுமாதத்திற்கு முன்பே இரகுராம் ராஜனை தூக்கிவிட்டு அந்த இடத்தில் உர்ஜித் பட்டேலை கொண்டுவரவேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்த மிகப்பெரிய ஊழலை செய்திருக்கிறார்கள். அதற்கேற்றார் போல நவம்பர் 08,2016 அன்று புதிய கவர்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அதரவு தெரிவித்தார்.

மேற்சொன்ன ஊழலை பற்றிய தகவல்களெல்லாம் மீண்டுமொரு பாஜக ஆட்சி அமைந்தால் விசாரணைக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பு என்பதே துளியளவும் இல்லை. உரிய ஆவணங்கள் இல்லாமல் நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்படாது. இது மட்டுமன்றி இந்த ஆட்சியில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதிலும் ஊழல்கள் நடந்திருப்பதை போதுமான அளவிற்கு ஆதாரங்களைக்கொண்டு 'தி இந்து' பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருகிறார். அந்த ஆவணங்களையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் ஆவணங்கள் திருடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் புகார் வாசித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் ஆவணங்கள் வந்த வழிகளை ஆராயாது அந்த ஆவணங்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டுமென்று கூறியுள்ளது.

மேலும் ஜி.எஸ்.டியின் மூலம் ஒற்றை தேசம் ஒற்றை வரி என்ற முறையை அமல்படுத்தி இங்குள்ள சிறு குறு தொழில்களின் மீது அதிக வரி விதித்து அவர்களது தொழிலை முடக்கிய பெருமையும் இந்த மோடி அரசையே சாரும். இந்த ஜி.எஸ்.டியால் அதிகளவில் பயனடைவது அதிகளவில் இறக்குமதி செய்யும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமேயன்றி இங்குள்ள சிறு, குறு தொழில்கள் அல்ல. இந்த தொழில்கள் மீது இந்த அரசு துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த ஜி.எஸ்.டி யால் திருப்பூர், கோவை, சிவகாசி, வேலூர் போன்ற தொழில் நகரங்கள் அடைந்துள்ள பாதிப்பையும் வேலையிழப்புகளையும் கள ஆய்வுகள் நமக்கு வெளிக்கொண்டு வருகின்றன. பெருநிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்யும் இடத்தில் அவர்களுக்கான வரிவிதிப்பு ஒன்றாகவும் சிறு குறு தொழில்களுக்கான வரிவிதிப்பு வேறாகவும் இருக்க வேண்டிய இடங்களில் இருவரும் ஒரே விதமான வரியை தான் அரசுக்கு செலுத்த வேண்டுமென்றால் அதில் பெரு நிறுவனங்கள் மட்டுமே பிழைக்கும். சிறு குறு நிறுவங்கள் நசிந்துவிடும். ஆனாலும் இவர்களை அரசு ஒன்றுபோலவே நடத்துவதாக தொழில் முனைவோர் புலம்புவது இந்த மாநில மத்திய அரசுகளின் காதுகளுக்கு எட்டுவதேயில்லை.

இத்தனை மோசமான ஆட்சியை வழங்கிய இவர்கள்தான் 'மீண்டும் மோடி... வேண்டும் மோடி' என்று ஆரவாரம் போட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தலுக்கான வாக்குறுதிகளிலும் பாஜக தனது இந்துத்துவ கொள்கைகளை நிலைநாட்டவே அதன் அறிக்கையை தயார் செய்திருக்கிறது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவோமென்றும், பொது சிவில் சட்டம் கொண்டுவருவோமென்றும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவோமென்றும் இவர்கள் மத ரீதியிலான மக்களை பிளவு படுத்தும் நோக்கிலேயே இவர்களது வாக்குறுதிகளை தயாரித்து வருகின்றனர். இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ளாட்சிகளிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வோம் என்றும் கூறியுள்ளனர். இவ்வாறு நடத்துவதன் நடைமுறை சாத்தியங்கள் துளியளவும் இல்லை. மேலும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால் அங்கு மக்களாட்சிக்கு விரோதமான ஜனாதிபதியின் ஆட்சி கொண்டுவருவார்கள், பின் மத்திய ஆட்சிக்கான தேர்தல் வரும்போதுதான் அந்த மாநிலத்திற்கும் தேர்தல் நடக்குமென்றால் அது அடிப்படை அரசியல் சாசனத்திற்கே எதிரானதாக அமையும். இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இவர்கள் தேசத்தை சர்வாதிகாரதிற்கான பாதையில் கொண்டுசெல்கிறார்கள் என்று மேலே குறிப்பிட்டிருந்தேன். மீண்டுமொரு பாஜக ஆட்சி வந்தால் அடுத்து இந்தியாவில் ஒரு தேர்தல் நடத்தப்படுமா என்பதே சந்தேகத்திற்குள்ளாகும் அளவிற்கு இந்திய ஜனநாயகம் அதன் இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொள்ளும். எனவே முதல் முறை வாக்களிக்கும் உரிமை பெற்றிருக்கும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் நாம் அனைவரும் பிரதமர் மோடி குறிப்பிட்டதை போல நம் வாக்குகளை உயர்ந்த இலட்சியங்களுக்காக பயன்படுத்தி நாட்டை சர்வாதிகாரத்திலிருந்து மீட்போம்.


--தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எடப்பாடி பழனிச்சாமியும் இரசகுல்லா கடைக்காரரும்

இரண்டு வருடங்களுக்கு முன் 2017இல் ஒரு கல்லூரியில் நேர்காணலுக்காக கொல்கத்தா வரை செல்ல நேர்ந்தது. வங்க மொழி(பங்ளா) தெரியாது, இந்தியும் தெரியாது, தெரிந்ததெல்லாம் தமிழ் மற்றும் இந்திய ஆங்கிலம் மட்டுமே. ஒரு வாரம் அங்கு தங்க வேண்டிய சூழல், ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட பங்ளாவோ, இந்தியோ தெரியாத குறையை கொல்கத்தா எனக்கு சிரமமாக முன்னிறுத்தவில்லை. டேக்சியில் பேரம் பேசுவது தொடங்கி, பேருந்துகளில், டீ கடைகளில், உணவகங்களில், நான் நேர்காணலுக்கு சென்ற கல்வி நிறுவனத்தில், சுற்றிப் பார்க்க சென்ற இடங்களில் என எங்குமே எனக்கு பங்ளாவோ, இந்தியோ தேவைப்படவில்லை. வங்க மக்கள் என் மொழியின் காரணமாக எனக்கு எந்த குறையையும் வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இத்தனைக்கும் அவர்கள் நான் வங்க மொழி பேசுபவன் அல்ல என்பதை உணர்ந்ததும் என்னுடன் அதிகமாக உரையாட விரும்பினர் என்றே எனக்கு தோன்றியது. உதாரணமாக நான்கு நாள் நேர்காணலில் ஒரு நாள் நான் தங்கியிருந்த அறைக்கு திரும்புகையில் கொல்கத்தா மாநகரப் பேருந்தில் ஒரு கன்டக்டர், மாநில பேருந்துகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களைதான் பணியமர்த்துவார்கள், அவர் ஒரு வங்காளி. அவ...

அரசியல் பிழைத்தோர் - 2

மதவாதத்திற்கு முடிவுகட்டுவோம்... 6 மாதங்களுக்கு முன்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலிருந்து அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு(Affiliated Colleges) ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம்  பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய 'இராஜ இராஜ சோழன்' எனும் நாடகம் இணைக்கப்படுவதாக இருந்தது அந்த சுற்றறிக்கை. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆட்சியர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது அந்த துறைத் தலைவர் தன்னை கேட்காமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பிவிட்டதாகவும் தான் அதை திரும்பப்பெறுவதாகவும் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகமே பாடத்திட்டத்தில் தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்சியர், பாடத்திட்டத்தில் மாற்றம் என்பது அகாடமி கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடந்திருப்பதற்கு துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நாட்ட...

புறநகர்

அவனுக்கு தெரியாத ஊரில் எனக்கு புரியாத மொழியில் வழி கேட்டான் ஒருவன் என்னிடம் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எனக்கே தெரியாத அந்த ஊரில் அவனுக்கு புரியாத மொழியில் ‘தெரியாது’ என்று சொன்னேன் நான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எங்கள் அருகில் நகரின் பூர்வகுடி ஒருவன் எட்டு ரூபாய் பேருந்துக்காக காத்திருந்தான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது…