முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எடப்பாடி பழனிச்சாமியும் இரசகுல்லா கடைக்காரரும்

இரண்டு வருடங்களுக்கு முன் 2017இல் ஒரு கல்லூரியில் நேர்காணலுக்காக கொல்கத்தா வரை செல்ல நேர்ந்தது. வங்க மொழி(பங்ளா) தெரியாது, இந்தியும் தெரியாது, தெரிந்ததெல்லாம் தமிழ் மற்றும் இந்திய ஆங்கிலம் மட்டுமே. ஒரு வாரம் அங்கு தங்க வேண்டிய சூழல், ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட பங்ளாவோ, இந்தியோ தெரியாத குறையை கொல்கத்தா எனக்கு சிரமமாக முன்னிறுத்தவில்லை. டேக்சியில் பேரம் பேசுவது தொடங்கி, பேருந்துகளில், டீ கடைகளில், உணவகங்களில், நான் நேர்காணலுக்கு சென்ற கல்வி நிறுவனத்தில், சுற்றிப் பார்க்க சென்ற இடங்களில் என எங்குமே எனக்கு பங்ளாவோ, இந்தியோ தேவைப்படவில்லை. வங்க மக்கள் என் மொழியின் காரணமாக எனக்கு எந்த குறையையும் வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இத்தனைக்கும் அவர்கள் நான் வங்க மொழி பேசுபவன் அல்ல என்பதை உணர்ந்ததும் என்னுடன் அதிகமாக உரையாட விரும்பினர் என்றே எனக்கு தோன்றியது. உதாரணமாக நான்கு நாள் நேர்காணலில் ஒரு நாள் நான் தங்கியிருந்த அறைக்கு திரும்புகையில் கொல்கத்தா மாநகரப் பேருந்தில் ஒரு கன்டக்டர், மாநில பேருந்துகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களைதான் பணியமர்த்துவார்கள், அவர் ஒரு வங்காளி. அவர் வங்க மொழியில் பேசி டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். என் அருகில் வந்ததும் நான் மேற்கு வங்கம் இல்லை என்பதை உணர்ந்த அவர் ‘எந்த மாநிலம்?’ என்று கேட்க ‘தமிழ்நாடு’ என்று நான் சொன்னதுதான் தாமதம், உடனடியாக அவர் ஒரு புன்னகையோடு என்னுடன் கதைக்க ஆரம்பித்தார். தமிழகத்தில் எந்த ஊர், கல்கத்தா வந்ததன் நோக்கம் என்ன என்றெல்லாம் விசாரித்தார். அடுத்து அவர் இங்கு ஸ்டாலின், எடப்பாடி, சசிகலா வரை அனைவரையும் கிழித்து தொங்கவிட ஆரம்பித்தார். தமிழகத்தில் இரண்டு மாநிலக் கட்சிகளும் ஊழல் நிறைந்தவை என்றார், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு வருந்தினார், அவர் தோழி சசிகலா என்பதை தெரிந்து வைத்திருந்தார் அதன் காரணமாக எடப்பாடி முதல்வராக இருப்பதையும் நொந்துகொண்டார். (அப்போது ஓபிஎஸ் தர்மயுத்தம் நடந்துகொண்டிருந்தது, எடப்பாடி சசிகலாவின் பக்கம்) கலைஞரின் உடல்நிலை முடியாமல் இருந்ததை அறிந்து வைத்திருந்தார். மம்தா மீது பல குறைகளை கொட்டி தீர்த்தார். மம்தாவிற்கு நீல நிறம் பிடிக்கும் என்பதால் மேற்கு வங்கத்தையே நீல நிறமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றார்.(கொல்கத்தாவில் முக்கியமான பாலங்கள் அரசு அலுவலகங்கள் எல்லாம் நீல நிறத்தில் தான் இருந்தன) அவருடைய பார்வையில் தேசிய கட்சிகளே மாநிலங்களை ஆட்சி செய்வது நல்லது என்று கருதினார். இவையனைத்தையும் அவர் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்திலும் இடையிடையே நிறைய பங்ளாவையும் கலந்து பேசிக்கொண்டிருந்தார். அன்று நாங்கள் பேசிக்கொள்ள மொழி ஒரு தடையாக இல்லை. இது ஒருபுறமெனில் மற்றொரு நாள் இன்னொரு பேருந்தில் புகழ்பெற்ற இராமகிருஷ்ண மடத்திற்கு போக டிக்கெட் எடுத்தேன். அந்த கன்டக்டரோ அங்கிருந்து நான் பஸ் ஏறிய இடத்திற்கு எப்படி திரும்ப வேண்டும், கடைசி பேருந்து எத்தனை மணிக்கு என்பதுவரை நான் கேட்காமலேயே விளக்கினார்.
தமிழகத்திற்கும் வங்கத்திற்கும் உணர்வு ரீதியாக பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே மறுமலர்ச்சி பெற்ற பழம்பெரும் மொழிகள். செழுமையான இலக்கியங்களை தன்னகத்தே கொண்டுள்ள மொழிகள். அரசியல் ரீதியாகவும் தங்கள் தனித்தன்மைக்காகவும், தங்கள் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து டெல்லியிடம் கேட்டு போராடும் இனங்கள். இதுபோக அங்கிருந்த நாட்களில் என் அறைக்கு பக்கத்தில் தென்னிந்திய உணவுகள் கிடைக்கிறதா என்று தேடிப்போக அங்கு ஒரு கேன்டீன், அதை நடத்துபவர் ஒரு தமிழர். தான் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் என்றும் கொல்கத்தா வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது என்றார். வங்க மொழியை சரளமாக கையாள்கிறார். இன்னொரு கடையில் இரசகுல்லா வாங்கிக்கொண்டிருந்தேன். அந்த கடையில் வேலை செய்யும் ஒருவர் நான் போனில் தமிழ் பேசுவதை கேட்டுவிட்டு எனக்கு இரசகுல்லாவிற்கான விலையை தமிழில் சொல்ல, உங்களுக்கு எப்படி தமிழ் தெரியும் என்றால் கோயம்புத்தூரில் தான் இரண்டு வருடங்கள் வேலை பார்த்ததாக கூறினார். கல்லூரியில் ஒரு இந்தி மாணவர் தமிழ் திரைப்படங்களை குறித்து என்னுடனும் நான் சில இந்திப் படங்களை குறித்து அவருடனும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தோம். உண்மையில் இந்தியாவில் எந்தவொரு பெருநகரத்திலும் இதுபோன்ற மனிதர்களே விரவிக் கிடக்கின்றனர். நான் எதேச்சையாக சந்தித்த மனிதர்கள் கூட என் மொழி அவர்களுக்கு புரியாவிட்டாலும் எனக்கு உதவுவதை முகம் சுளிக்காமல் செய்தனர்(எல்லோரிடமும் எதிர்பார்ப்பதும் தவறு). அதற்காக நான் வங்கமொழியை கற்க விரும்பவில்லை, அது தேவையில்லை என்று பொருளல்ல. நான்கு நாட்களில் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளை நானும் என் உணர்வுகளை அவர்களும் புரிந்துகொள்ள மொழி ஒரு தடையாக இல்லை. இதுவே நான் நான்கு மாதங்கள் அங்கு இருந்திருந்தால் எனக்கு வங்க மொழி புரிய ஆரம்பித்திருக்கும், நான்கு வருடங்கள் இருந்திருந்தால் நான் வங்க மொழியில் சரளமாக பேசியிருக்கக்கூடும். அது இயற்கையாகவே நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஏன் அந்த கேன்டீன் நடத்தும் தமிழர் வங்க மொழியையும், இரசகுல்லா விற்கும் நபர் தமிழ் மொழியையும், பஸ் கன்டக்டர் மேலோட்டமாக தமிழக அரசியலையும் எனக்கு மேலோட்டமாக வங்க அரசியலையும் தெரிந்திருக்கவில்லையா? ஒரு தமிழர் கொல்கத்தாவில் வியாபாரம் செய்ய நினைத்தால் அவர் வங்க மொழியை நாளடைவில் கற்றறிந்து அந்த மொழியை சரளமாக கையாள்கிறார். மற்றொருவர் தமிழகத்தில் வேலை பார்த்ததால் தமிழ் பேசக்கூடியவராக இருக்கிறார். இது இந்தியாவின் அனைத்து பெருநகரங்களுக்கும் அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் பொருந்தும்.
மொழி என்பது அடிப்படையில் ஒருவர் உணர்வை மற்றொருவருக்கு கடத்தும் கருவி. இதில் தமிழ் பேசும் ஒருவருக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. தேவையின் பொருட்டு எந்த மொழியையும் கற்கும் உரிமையையும் வாய்ப்பையும் நாம் ஏற்படுத்தியிருக்கிறோமா, ஒரு மாநிலத்தில் மொழிச் சிறுபான்மையினருக்கு அவர்களின் மொழியை கற்பதற்கு வாய்ப்புகள் கொடுக்கிறோமா என்பதுதான் கேள்வி. அப்படி பார்த்தால் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையினால் நாம் பிற மொழி கற்க தடை விதிப்பது போல ஒரு பிம்பத்தை இங்கு நம்மில் சிலரே உருவாக்குவது முறையல்ல. இங்கு இரண்டாம் மொழியாக தமிழ் கட்டாயம் அல்ல. எனக்கு தெரிந்து நான் படித்த பள்ளியில் இந்தி, பிரெஞ்ச் போன்ற மொழிகளை இரண்டாம் மொழியாக படித்த நண்பர்கள் உண்டு. எல்லையோர மாவட்டங்களான ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளை பல மாணவர்கள் பயில்கின்றனர். அங்கு வசிக்கும் மக்களே கூட மிகவும் சாதாரணமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் இதில் ஏதேனும் இரு மொழிகளில் சரளமாக பேசுவார்கள். இதுபோக குஜராத்தி, உருது போன்ற மொழிகள் கூட தமிழகத்தில் சில பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுகின்றன. ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும், பொது மொழியாகவும் நமக்கு மிகவும் தேவையான ஒரு மொழியாக இருப்பதால் அதனை கட்டாயமாக பள்ளி கல்லூரிகளில் படிக்கின்றோம், பேசுகின்றோம். அதன் வழியாகவே கல்வி பயில்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் ஆங்கில வழி கல்வியை விட ஒரு குழந்தை தன் தாய்மொழியில் கல்வி கற்பதனால் கிடைக்கும் அறிவு நுட்பம் கூர்மையாக இருக்குமென ஆய்வுகள் கூறுகின்றன. அது ஏனெனில் தெரிந்த மொழியில் இருந்து தெரியாத விஷயங்களை கற்கும்போது கிடைக்கும் நுட்பம் தெரியாத மொழியில் இருந்து தெரியாத விஷயத்தை கற்பதைவிட அதிகமானது என்கிறது அந்த ஆய்வு.
உண்மையில் தமிழகம் பல திராவிட மொழிகள் பேசும் மக்களும் கூடி வாழும் மாநிலமாக இருக்கிறது என்பதே நிதர்சனம். பின்பு ஏன் இந்தி என்றால் தமிழகம் இவ்வளவு பரபரப்பாகிறது? ஏன் தமிழக அரசியல் களம் மட்டுமன்றி வெகுமக்கள் தளத்திலும் அந்த பரபரப்பு தொற்றிக்கொள்கிறது? காரணம் இல்லாமல் இல்லை. தமிழக மக்கள் இந்தி எனும் மொழியை விடவும் அதன் ஆதிக்கத்தை மூர்க்கமாக எதிர்க்கின்றனர் என்றே சொல்லவேண்டும். தேவநாகரி எழுத்து வடிவத்தை அடிப்படையாக கொண்ட சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமாக முன்னிறுத்தி அதனை இந்தி பேசாத மாநிலங்களின் மீதும் திணிக்கும் அரசியலை எதிர்க்கின்றனர். இது வரலாறு நெடுகிலும் நடந்து வந்த ஒரு மறைமுக யுத்தமாக இருந்தாலும் 20ஆம் நூற்றாண்டில் தமிழில் நடந்த மொழிச் சீர்திருத்தம் காரணமாக விழிப்புணர்வடைந்து அரசியல் ரீதியாக வெளிப்படையாக வீரியமாக எதிர்க்க தொடங்கினர். 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இராஜகோபாலாச்சாரி பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்கினார். அதனை எதிர்த்து நீதிக்கட்சியும், பெரியாரும் உண்ணாவிரதம், பேரணி, மாநாடுகள் போன்றவற்றை முன்னெடுத்தனர். அதில்தான் சமஸ்கிருதம் எனும் மொழி திராவிட மொழிகளின் மேல் உண்டாக்கிய சீரழிவுகளை வெகுமக்களின் முன்னிலையில் முதன்முறையாக எடுத்துரைத்தனர். இதுவே முதலாம் மொழிப்போர் ஆகும், பின் 1940இல் இந்த திட்டம் கைவிடப்பட்டது. பின் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு அரசியல் நிர்ணய சபையில் கன்னியமிகு காயிதே மில்லத் போன்ற சில தென் மாநிலத்தவரே இருந்தனர், அங்கு இந்தி பேசும் மக்களின் ஆதிக்கத்தால் அலுவல் மொழியாக இந்தியை கொண்டுவந்தனர். 15 ஆண்டுகள் வரை இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென்றும் அதன்பின்னர் இந்தியே பிரதானமாக இருக்கும் என்றும் வரையறுக்கப்பட்டது. இது இந்தியாவில் இருக்கும் இந்தி பேசாத மாநிலங்களின் உரிமைகளை நேரடியாக மறுக்கும் விதமாக இருந்தது. இதனை எதிர்த்து அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் ‘இந்தியுடன் ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடரலாம்’ என்றால் அது தொடராமல் போகவும் வழிவகுக்கும் என்று வாதிட்டு ‘இந்தியுடன் ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடரும்’ என்று மாற்றியமைக்க கோரினார். ஆனால் அது நிறைவேறாமல் போக மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல் படுத்த தொடங்கிவிட்டனர். தமிழத்தில் இது 1964 ஆம் ஆண்டு அமலுக்கு வர இரண்டாம் மொழிப்போர் தொடங்குவதற்கு அதுவே காரணமாக அமைந்தது. இந்த இரண்டாம் மொழிப்போரில் 70க்கும் மேற்பட்டோர்(அரசுத் தரவுகள்) தங்கள் இன்னுயிரை ஈந்தனர். பல போராட்டங்களுக்கு பின், அரசியல் குழப்பங்களுக்கு பின் 1967இல் ஆங்கிலம் மற்றும் இந்தி அலுவல் மொழியாக தொடர்ந்து நீடிக்கும் என்ற சட்ட திருந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது தமிழகத்திலும் ஆட்சிமாற்றம் ஏற்பட திமுக வந்தவுடன் இருமொழிக்கொள்கை சட்டமாக்கப்பட்டது. இதற்கிடையில் மறைமுகமாக எங்கேனும் சட்டத்திருத்தங்கள், புதிய திட்டங்களின் வழியாக இந்தி எட்டிப்பார்த்தால் கூட அதனை கண்டறிந்து அதற்கு எதிராக தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும். இது 1986இல் மத்திய அரசு நவோதயா பள்ளிகளின் மூலம் இந்தி கட்டாயமாக்க நினைக்கிறது என்று தெரிந்து அதற்கு எதிராக தீவிரமாக தமிழகத்தில் போராட்டம் நடந்தது. அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்தி நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை எனும் வாக்குறுதியை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார். இன்று வரை இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் நவோதயா பள்ளிகள் இல்லை. இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
இன்று தேசிய கல்வி கொள்கை 2019இன் வரைவு அறிக்கை மீண்டும் மும்மொழிக் கொள்கைக்கு வழிவகுக்கிறது. உண்மையில் மும்மொழி என்பது 12 வயது மாணவர்களுக்கு ஒரு சுமைதானேயன்றி அது ஒன்றும் பிற மொழியாற்றலை வளர்க்கும் அதிசய திட்டமல்ல. அதேநேரம் இருமொழிக் கொள்கையினால் தமிழகம் ஒன்றும் பின்தங்கிவிடவில்லை. இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் தமிழகம் அனைத்து குறியீடுகளிலும் முன்னணியில்தான் இருக்கிறது. மேலும் இங்குள்ள பிற மொழி பேசும் மக்கள், பிற மொழி கற்க விரும்பும் மக்கள் அவர்களின் தொழில், படிப்பு போன்ற தேவைகளுக்கேற்ப அந்தந்த மொழிகளை கற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர் என்பதே உண்மை. அதேநேரம் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்ட கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இன்று மாநில மொழிகளின் தேவை குறித்தும் அவர்களின் மொழியுரிமையை குறித்தும் பல குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளது என்பதனை நாம் கவனிக்க வேண்டும். இந்தி பேசாத இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடி என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் அங்கு தலைதூக்கும் இந்தி மொழியின் ஆதிக்கம் தான். இன்று இராஜஸ்தான் எனும் மாநிலத்தின் பூர்வ மொழியாக இருந்த இராஜஸ்தானி மொழி பேசும் மக்கள் அங்கு மிக சொற்ப அளவிலேயே இருக்கின்றனர். அவர்கள் மொழி குறித்து பேசக்கூட அங்கு எவருமில்லை என்பதே கசப்பான உண்மை. இந்தி முழுவதுமாக அந்த மொழியை விழுங்கிவிட்டது. மேலும் இந்திதான் எங்கள் மொழி என்று கூறும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மாநிலங்களில் கூட உருது, பார்சி போன்ற மொழிகள் பேசும் மக்கள் இருக்கின்றனர். அவர்களின் மொழியுரிமை என்பதெல்லாம் அங்கேயே கேள்விக்குறிதான். இதேபோன்று தென்மாநிலங்களில் துளு, படுகா, தோடா, குறும்பா எனும் மொழிகள் பேசும் மக்களும் ஆங்காங்கே சொற்பமாக இருக்கிறார்கள். இவர்களின் மொழிகளை பாதுகாக்கும் நடவடிக்கையையும் தென் மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். கல்வியில் மொழிகள் மீதான உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை முதன்மையான கோரிக்கையாக இந்தி பேசாத மாநிலங்கள் முன்வைக்கவேண்டும். தேசிய இனங்கள் என்ன மொழியை கற்க வேண்டுமென்பதை டெல்லி தீர்மானிக்க முடியாத நிலை இருக்க வேண்டும். அதில்தான் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கான மையப்புள்ளி இருக்கிறது. ஏனெனில் மொழி என்பது உணர்வுகளை கடத்தும் கருவி என்பதையும் தாண்டி அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளை அது உள்ளடக்கியது. அதுவே ஒரு ஆளும் அரசுக்கும் அதன் கீழ் வாழும் வெகுமக்களுக்கும் பேராயுதம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசியல் பிழைத்தோர் - 2

மதவாதத்திற்கு முடிவுகட்டுவோம்... 6 மாதங்களுக்கு முன்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலிருந்து அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு(Affiliated Colleges) ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம்  பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய 'இராஜ இராஜ சோழன்' எனும் நாடகம் இணைக்கப்படுவதாக இருந்தது அந்த சுற்றறிக்கை. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆட்சியர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது அந்த துறைத் தலைவர் தன்னை கேட்காமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பிவிட்டதாகவும் தான் அதை திரும்பப்பெறுவதாகவும் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகமே பாடத்திட்டத்தில் தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்சியர், பாடத்திட்டத்தில் மாற்றம் என்பது அகாடமி கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடந்திருப்பதற்கு துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நாட்ட...

புறநகர்

அவனுக்கு தெரியாத ஊரில் எனக்கு புரியாத மொழியில் வழி கேட்டான் ஒருவன் என்னிடம் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எனக்கே தெரியாத அந்த ஊரில் அவனுக்கு புரியாத மொழியில் ‘தெரியாது’ என்று சொன்னேன் நான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எங்கள் அருகில் நகரின் பூர்வகுடி ஒருவன் எட்டு ரூபாய் பேருந்துக்காக காத்திருந்தான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது…