முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடஒதுக்கீடு - சமூக நீதிக்கான பாதை - 5

'இந்தியாவில் சமத்துவம்(Equality) என்பது சமமானவர்களிடம் மட்டுமே நிலவுகிறது, எனவே சமமற்றவர்களை சமமாக நடத்தினால் அது சமனற்ற தன்மையை(Inequality) மட்டுமே நிலைநிறுத்தும்' என்பது சட்ட நிபுணர்களின் கூற்று. இன்றைய நிலையில் நாம் மேற்கண்ட வரிகளை பற்றி மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. 'சட்டத்தின் பார்வையில் நாட்டில் அனைவரும் சமம்தான் என்றால் எதற்கு அரசாங்கமே சட்டம் இயற்றி இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்புகளை வழங்க வேண்டும்?'  என்பது இந்த இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பலர் முன்வைக்கும் அபத்தமான கேள்வி. இதற்கான பதிலை புரிந்துகொள்வதற்கு முன்பாக நாம் நமது நாட்டின் அடிப்படை சமூக கட்டமைப்பை உள்வாங்க வேண்டும். வரலாற்றின் அடிதொட்டு இந்திய சமூகம் பல ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பியது. எந்த ஆட்சியின் கீழும் இப்போதுள்ள இந்திய நிலப்பரப்பில் சமூகம் சமத்துவமிக்கதாக இருந்ததில்லை என்பதாகவே வரலாறு கூறுகிறது. நாம் 20ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்று குடியரசாக மாறியபோது நமது அடிப்படை அரசியல் சாசனம் இவ்வாறு கூறுகிறது, 'இந்திய அரசு மதத்தாலும், இனத்தாலும், சாதியாலும், பாலினத்தாலும், பிறப்பிடத்தாலும் குடிமக்களுக்குள் பாகுபாடுகள் காட்டாது' என்கிறது. மேற்கண்ட சொற்கள் சட்டத்தில் எழுத்தாக மட்டுமே இருந்தது. இவ்வாறு சட்டம் இயற்றியதால் மட்டுமே நடைமுறையில் சமூகத்தில் அனைவரும் சமமாக இருந்துவிடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன மதம், சாதி, இனம், மொழி, என்று பல ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தே வந்தன. இன்றளவும் தொடர்கின்றன. இதனை முற்றிலுமாக களைய வேண்டும் என்பதே நமது இலக்கு எனும் பட்சத்தில் மேலே கட்டுரையில் உள்ள முதல் இரண்டு வரிகளை நாம் நினைவு கூற வேண்டும். 'சமமற்றவர்களை சமமாக நடத்தினால் அது சமமற்ற தன்மையில் தான் முடியும்.'

இவ்வாறு சமூகத்தில் சாதியின் பெயரால் நாடெங்கும் நிரம்பியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை ஆராய்ந்த அண்ணல் அம்பேத்கர் சாதி என்பது வகைப்படுத்தப்பட்ட சமத்துவனமின்மையினால்(Graded Inequalities) ஆனது என்பதை கண்டடைகிறார். இங்கு ஒருவர் நினைத்தால் எந்த மதத்தையும், மார்கமாக தெரிவு செய்து மதம் மாறிக்கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒருவர் அந்த சாதியில் இருந்து அவர் இரக்கும் வரையிலும் அவரே நினைத்தாலும் மாறிவிட முடியாது. இது எதனால் என்றால் ஒருவர் எந்த சாதி என்பது அவரின் பிறப்பில் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு பிறப்பால் தீர்மானிக்கப்பட்டு  காலம் காலமாக சாதியப் படிநிலையில் கீழ் நிலையில் உள்ள மக்கள், சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டவர்கள், கல்வியாலும் சமூகத்தாலும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அரசு தான் அனைவருக்குமான அரசாக இருக்க முடியும். அதன்படி அரசியல் சாசனத்தின்  முதல் சட்டத்திருத்தத்தில் சாதியால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

இதில் பாகுபாடு என்பதே கிடையாது, இது அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்க கூடிய அடிப்படை உரிமை. இதில் போகிறபோக்கில் எந்த வகுப்பினரும் பயனடைந்துவிட முடியாது. இதில் தாழ்த்தப்பட்ட/பட்டியலின மக்கள் அவர்களுக்கு தீண்டாமை எனும் இழிவு தொடர்ந்தாலே அவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக வகைப்படுத்தலாம். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதனை வகைப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. நாம் மண்டல் கமிஷனை பற்றி பார்த்தபோது சொன்ன அத்தனை அளவுறுகளையும்(Parameters) ஆதாரப்பூர்வமாக காட்டினால் மட்டுமே ஒரு சாதியை பிற்படுத்தபட்டவர்களாக வகைப்படுத்த முடியும். இவையனைத்தும் அரசியல் நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டு விதிகள் அதன் சமத்துவத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே ஒதுக்கப்படவேண்டிய இடங்கள் சிறுபான்மை இடங்களாக இருக்க வேண்டுமென்று அரசியல் சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த 103ஆவது சட்ட திருத்தத்தில்  இதனை நேரடியாக மீறும் விதமாக பொருளாதாரம் எனும் அளவீட்டை இணைத்து அதிக இடங்களை முன்னேறிய வகுப்பினரை கொண்டு நிரப்ப  சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது இந்த பாஜக அரசாங்கம். 

'முன்னேறிய வகுப்பில் பிறந்ததால் மட்டுமே ஒருவருக்கு கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் வாய்ப்பு கிடைக்காமல் போவது என்பது மட்டும் ஏற்கத்தக்கதா?', 'திறமைக்கு மரியாதை இல்லையா?' என்பதையெல்லாம் ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் அதற்கான பதில் அந்த பெயரிலேயே இருக்கிறது. முன்னேறிய வகுப்பிற்கு இடஒதுக்கீட்டில் எதற்கு பங்கு? ஒருவேளை சமூகத்தினுள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறிய வகுப்பில் இருக்கும் ஒரு சாதியினர் சரியான முறையில் பிரதிநிதித்துவபடவில்லை என்றால் அதற்கான ஆதாரங்களை அரசின் கவனித்திற்கோ அல்லது அரசே கவனித்தாலோ அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரதிநிதித்துவத்திற்கான ஏற்பாடு செய்யலாம். அல்லது அவர்கள் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் முன்பு இருந்ததை விட பின்தங்கியுள்ளனர் என்றால் அதற்கான ஆதாரங்களை காட்டி அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கலாம். ஆனால் இன்றுவரை அதற்கான தேவை எழுந்தது இல்லை. தங்கள் மக்கள்தொகையை விடவும் அதிக அளவிற்கான பிரதிநிதித்துவதையே முன்னேறிய வகுப்பினர் சிலர் அனுபவித்து வருகின்றனர். அதற்கான சான்றுகளையும் முன்வைத்திருந்தோம். மேலும் இந்த இடஒதுக்கீட்டில் 'திறமை' என்ற சொற்பிரயோகமே தவறானது. இடஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு பெற்றவர்கள் திறமையற்றவர்கள் என்பதைப் போல ஒரு தோற்றம் முன்னேறிய வகுப்பினரிடையே தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. திறமை என்பது அனைவருக்கும் பொதுவானது. இடஒதுக்கீட்டிற்கான தகுதியான மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ஒருவருக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படுகிறது. இதில் அவர் திறமையற்றவர் என்கிற வாதமே முற்றிலும் தவறாகிப் போகிறது.  

இத்தனை கடினங்களையும் தாண்டிய இந்த இடஓதுக்கீட்டு கொள்கை இன்று வேலைவாய்ப்பில் நடைமுறைப்படுத்தக்கூட முடியாத நிலையில் தனியார்மயத்தாலும், பொதுத்துறை நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளினாலும், திட்டமிட்டு பொதுத்துறை நிறுவனங்களை வீழ்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் அரசுகளாலும் கேள்விக்குறியாகி இருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம்(National Sample Survey Office) அறிக்கை வெளியிடுகிறது. கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக நீட் போன்ற தேர்வுகள் திணிக்கப்பட்டு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதில் இடஒதுக்கீட்டை எப்படி மேலும் மேம்படுத்தலாம் என்கிற ரீதியில் யோசித்து இந்த இடஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்புகள் சென்றடையாமல் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே இருக்கும் சில வகுப்புகளுக்கு உள்ஒதுக்கீடு(Inner Reservations) செய்வது, தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை உறுதி செய்வது, நீதித்துறையில் பிரதிநிதித்துவம் ஏற்பட வழி செய்வது என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல் முன்னேறிய வகுப்பினருக்கு 10% போன்று தொடர்ந்து இதனை சீர்குலைக்கவே முயற்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. சமுதாயம் மேடு பள்ளமாக இருக்கிறதென்றால் பள்ளத்தில் மண்ணைக்கொட்டி சாலையை சீர் செய்வது தான் தீர்வாக இருக்க முடியுமே தவிர மேட்டையும் பள்ளத்தையும் சமமாக பாவித்தால் அந்த சாலை மேடும் பள்ளமுமாகவே தொடரும். இது தான் இடஒதுக்கீடு பற்றிய ஒரு எளிய மனிதனான என்னுடைய கருத்து. இதற்கெல்லாம் மேலாக மனிதர்களுக்குள் சாதி, மதம் போன்ற எண்ணம் ஒழிந்து சமூகத்தில் சமத்துவம் தழைத்தோங்குமானால் காலப்போக்கில் இந்த இடஒதுக்கீடே தேவையற்ற ஒன்றாக கூட ஆகிப்போகலாம். அதுதான் நமது இலக்கும்(Goal) கூட, ஆனால் அந்த இடத்தை அடைவதற்கு இந்த சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு இந்த இடஒதுக்கீடு ஒன்றே வழி.

-முற்றும்


நன்றி,
கவின் கௌதமன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எடப்பாடி பழனிச்சாமியும் இரசகுல்லா கடைக்காரரும்

இரண்டு வருடங்களுக்கு முன் 2017இல் ஒரு கல்லூரியில் நேர்காணலுக்காக கொல்கத்தா வரை செல்ல நேர்ந்தது. வங்க மொழி(பங்ளா) தெரியாது, இந்தியும் தெரியாது, தெரிந்ததெல்லாம் தமிழ் மற்றும் இந்திய ஆங்கிலம் மட்டுமே. ஒரு வாரம் அங்கு தங்க வேண்டிய சூழல், ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட பங்ளாவோ, இந்தியோ தெரியாத குறையை கொல்கத்தா எனக்கு சிரமமாக முன்னிறுத்தவில்லை. டேக்சியில் பேரம் பேசுவது தொடங்கி, பேருந்துகளில், டீ கடைகளில், உணவகங்களில், நான் நேர்காணலுக்கு சென்ற கல்வி நிறுவனத்தில், சுற்றிப் பார்க்க சென்ற இடங்களில் என எங்குமே எனக்கு பங்ளாவோ, இந்தியோ தேவைப்படவில்லை. வங்க மக்கள் என் மொழியின் காரணமாக எனக்கு எந்த குறையையும் வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இத்தனைக்கும் அவர்கள் நான் வங்க மொழி பேசுபவன் அல்ல என்பதை உணர்ந்ததும் என்னுடன் அதிகமாக உரையாட விரும்பினர் என்றே எனக்கு தோன்றியது. உதாரணமாக நான்கு நாள் நேர்காணலில் ஒரு நாள் நான் தங்கியிருந்த அறைக்கு திரும்புகையில் கொல்கத்தா மாநகரப் பேருந்தில் ஒரு கன்டக்டர், மாநில பேருந்துகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களைதான் பணியமர்த்துவார்கள், அவர் ஒரு வங்காளி. அவ...

அரசியல் பிழைத்தோர் - 2

மதவாதத்திற்கு முடிவுகட்டுவோம்... 6 மாதங்களுக்கு முன்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலிருந்து அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு(Affiliated Colleges) ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம்  பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய 'இராஜ இராஜ சோழன்' எனும் நாடகம் இணைக்கப்படுவதாக இருந்தது அந்த சுற்றறிக்கை. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆட்சியர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது அந்த துறைத் தலைவர் தன்னை கேட்காமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பிவிட்டதாகவும் தான் அதை திரும்பப்பெறுவதாகவும் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகமே பாடத்திட்டத்தில் தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்சியர், பாடத்திட்டத்தில் மாற்றம் என்பது அகாடமி கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடந்திருப்பதற்கு துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நாட்ட...

புறநகர்

அவனுக்கு தெரியாத ஊரில் எனக்கு புரியாத மொழியில் வழி கேட்டான் ஒருவன் என்னிடம் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எனக்கே தெரியாத அந்த ஊரில் அவனுக்கு புரியாத மொழியில் ‘தெரியாது’ என்று சொன்னேன் நான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எங்கள் அருகில் நகரின் பூர்வகுடி ஒருவன் எட்டு ரூபாய் பேருந்துக்காக காத்திருந்தான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது…