முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடஒதுக்கீடு - சமூக நீதிக்கான பாதை - 4

இந்தியாவின் மிக உயரிய கல்வி நிறுவனம் அது, நாடு விடுதலை அடைந்த பின்பு கல்வியில் குறிப்பாக தொழில்நுட்பத்தில், மேற்குலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கூர்மையடைய வேண்டுமென்றும் அதற்கான கல்வி மிகச்சிறப்பாகவும் தரமானதாகவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனடையும் வகையில் அமைய வேண்டுமென்ற உயரிய எண்ணத்துடன் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் சீரிய முயற்சியில் நிறுவப்பட்டவை இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs). அதே போன்று இந்தியாவின் திட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் நிறுவப்பட்டவை இந்திய மேலாண்மை கழகங்கள் (IIMs). இன்றைய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இந்நிறுவனங்களில் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்பது பின்பற்றப்படுவதே இல்லை. அங்குள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் இதர பதவிகளாக மொத்தமுள்ள 9,640 பணியிடங்களில் 5,466 பேர் பொதுப்பிரிவினரை சேர்ந்தவர்கள். அதிலும் பார்ப்பனர்களே அதிகம். இதில் பிற்படுத்தப்பட்டவர்கள் (OBC) 356 பேரும், தாழ்த்தப்பட்டவர்கள் (SC) 157 பேரும் மற்றும் பழங்குடியினர் (ST) வெறும் 23 பேர் மட்டுமே இந்த உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். ஐஐடி நிர்வாகம் இதுபற்றி விளக்கமளித்த போது தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று கூறுகிறது. இடஒதுக்கீடு போக மீதமுள்ள 50.5% முழுமையாக பொதுப்பிரிவினரே பணியில் இருப்பார்களேயானால் கூட 4,868 பேர் மட்டுமே பணி புரிய முடியும். மேலும் தகுதியானர்வர்கள் இல்லை என்று கூறுவது நாட்டில் 62.2% சதவீத மக்களில் ஒரு 4,772 (49.5%) பேர் இல்லை என்று கூறுவது வேடிக்கையான காரணம். ஒரு பக்கம் அங்கு கல்வி பயில பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் அங்கு பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் இல்லை என்று நிர்வாகம் கூறுகிறது.

இது நம் கண்முன்னே நிகழும் ஒரு சமூக அநீதி. மேலும் இடஒதுக்கீடு என்பது ஏதோ இந்த ஐஐடியின் வேலைவாய்ப்பிலும் மற்ற அரசாங்க உயர்பதவிகளிலும் குறிப்பிட்ட சிலரை பணியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. அது அரசின் அத்தனை மட்டங்களிலும், உயரடுக்குகளிலும்(Elite Positions) அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதித்துவத்தையும்(Representation) உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட உரிமை. அப்படி ஒரு கல்விக்கான உயரடுக்கில், ஐஐடியில் இந்த பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யாத நிலைதான் இன்றும் நீடிக்கிறது. இது ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தின் நிலை அல்ல. மருத்துவத்திற்கான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்திலும்(AIIMS) நாட்டின் இன்னபிற உயர்கல்வி நிலையங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. மேலும் இது தொடர்பாக கிடைக்கக்கூடிய தரவுகள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 71 வருடங்களுக்கு பிறகு நாம் இதுவரை பேசிவந்த அனைத்து தரப்பு மக்களுக்கான பிரதிநிதித்துவம்(Representation) என்பது எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கான புள்ளி விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம்,

(தரவுகள் - தொகுக்கப்பட்டவை)

நீதித்துறை - உச்சநீதிமன்றம் (Judiciary - Supreme Court) - 2018
முன்னேறிய வகுப்பினர் (Forward Communities)                                   -          91%

நீதித்துறை - உயர்நீதிமன்றங்கள் (Judiciary - High Courts) - 2018
முன்னேறிய வகுப்பினர் (Forward Communities)                                   -          87.5%

ஊடகம் - ஆசிரியர்கள் குழு (Media - Editorial Board) - 2016
முன்னேறிய வகுப்பினர் (Forward Communities)                                   -          77%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(Backward Communities)                         -          3.5%

மத்திய அமைச்சரவை செயலாளர்கள் - கொள்கை முடிவுகள் - 2018
(Union Cabinet Secretaries - Policy Making)
முன்னேறிய வகுப்பினர் (Forward Communities)                                   -          97%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(Backward Communities)                         -          2%
ஒடுக்கப்பட்ட/தாழ்த்தப்பட்ட வகுப்பினர்(Scheduled Castes)               -          1%
பழங்குடியினர்/மலைவாழ் வகுப்பினர்(Scheduled Tribes)                   -          0%

மத்திய அரசு பதவிகள் - பிரிவு A (Group A Officers) - 2018
முன்னேறிய வகுப்பினர் (Forward Communities)                                   -          77.6%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(Backward Communities)                         -          6.9%
ஒடுக்கப்பட்ட/தாழ்த்தப்பட்ட வகுப்பினர்(Scheduled Castes)               -          11.5%
பழங்குடியினர்/மலைவாழ் வகுப்பினர்(Scheduled Tribes)                   -          4% 

மத்திய அரசு பதவிகள் - பிரிவு B (Group B Officers) - 2018
முன்னேறிய வகுப்பினர் (Forward Communities)                                   -          72.7%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(Backward Communities)                         -          7.3%
ஒடுக்கப்பட்ட/தாழ்த்தப்பட்ட வகுப்பினர்(Scheduled Castes)               -          14%
பழங்குடியினர்/மலைவாழ் வகுப்பினர்(Scheduled Tribes)                   -          4%

மத்திய அரசு பதவிகள் - பிரிவு C (Group C Officers) - 2018
முன்னேறிய வகுப்பினர் (Forward Communities)                                   -          59.8%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(Backward Communities)                         -          15.6%
ஒடுக்கப்பட்ட/தாழ்த்தப்பட்ட வகுப்பினர்(Scheduled Castes)               -          17%
பழங்குடியினர்/மலைவாழ் வகுப்பினர்(Scheduled Tribes)                   -          7.6%

வங்கிகள் - பொது மேலாளர்கள் (Banking - General Managers) - 2016 
முன்னேறிய வகுப்பினர் (Forward Communities)                                   -          91%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(Backward Communities)                         -          3.5%
ஒடுக்கப்பட்ட/தாழ்த்தப்பட்ட வகுப்பினர்(Scheduled Castes)               -          5.5%
பழங்குடியினர்/மலைவாழ் வகுப்பினர்(Scheduled Tribes)                   -          0%

மேலே உள்ள தரவுகள் தான் இன்றைய யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இதிலும் முன்னேறிய வகுப்பினர் பிரிவில் வரும் பெரும்பான்மை இடங்கள் பார்ப்பனர்களால் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் அனைவருக்குமான பிரதிநித்துவம் எங்குள்ளது? இதில் பல துறைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின் கூட்டுத்தொகை கூட இடஒதுக்கீட்டினால் நிரப்ப வேண்டிய இடங்களின் 49.5% சதவீதத்தை நெருங்கவில்லை என்பதே கசப்பான உண்மை. நிலைமை இவ்வாறிருக்க மத்தியில் ஆளும் அரசுகள் அது காங்கிரஸோ, பாஜகவோ தொடர்ந்து இந்த இடஒதுக்கீட்டை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மட்டுமே எடுத்து வருகின்றன. அது இந்த 2019இன் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு வரை தொடர்கிறது. இன்றளவும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ள பெரும்பான்மை மக்கள் எதனால் பின்தங்கியுள்ளனர் என்று கவனித்தால் அதில் சாதி என்பது முக்கிய காரணமாக இருக்கிறது. சாதியின் அடிப்படையில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன என்பது தான் இன்றளவும் உள்ள நிலை.   இதனை உணர்ந்து இதை சரிசெய்யக்கூடிய, அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்ட வேண்டிய இடங்களில் கூட அனைவருக்குமான சமமான பிரநிதித்துவம் இல்லை என்பது எவ்வளவு இழிவான விஷயம்? இங்கு தான் அம்பேத்கரின் சட்ட நுணுக்கங்களும், கருத்துகளும் பெரியாரின் போராட்டங்களும் அவர்கள் செய்துவைத்த பணிகளும் நமக்கு இன்றியமையாத பாடங்களாக இருக்கின்றன. இன்றும் இந்த இடஒதுக்கீட்டிற்காக சமரசமில்லாமல் பாடுபடும் எண்ணற்ற மனிதர்களின் உழைப்பில் தான் இதையெல்லாம் நம்மால் வெளிச்சத்திற்கு கொண்டுவர முடிகிறது.

-தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எடப்பாடி பழனிச்சாமியும் இரசகுல்லா கடைக்காரரும்

இரண்டு வருடங்களுக்கு முன் 2017இல் ஒரு கல்லூரியில் நேர்காணலுக்காக கொல்கத்தா வரை செல்ல நேர்ந்தது. வங்க மொழி(பங்ளா) தெரியாது, இந்தியும் தெரியாது, தெரிந்ததெல்லாம் தமிழ் மற்றும் இந்திய ஆங்கிலம் மட்டுமே. ஒரு வாரம் அங்கு தங்க வேண்டிய சூழல், ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட பங்ளாவோ, இந்தியோ தெரியாத குறையை கொல்கத்தா எனக்கு சிரமமாக முன்னிறுத்தவில்லை. டேக்சியில் பேரம் பேசுவது தொடங்கி, பேருந்துகளில், டீ கடைகளில், உணவகங்களில், நான் நேர்காணலுக்கு சென்ற கல்வி நிறுவனத்தில், சுற்றிப் பார்க்க சென்ற இடங்களில் என எங்குமே எனக்கு பங்ளாவோ, இந்தியோ தேவைப்படவில்லை. வங்க மக்கள் என் மொழியின் காரணமாக எனக்கு எந்த குறையையும் வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இத்தனைக்கும் அவர்கள் நான் வங்க மொழி பேசுபவன் அல்ல என்பதை உணர்ந்ததும் என்னுடன் அதிகமாக உரையாட விரும்பினர் என்றே எனக்கு தோன்றியது. உதாரணமாக நான்கு நாள் நேர்காணலில் ஒரு நாள் நான் தங்கியிருந்த அறைக்கு திரும்புகையில் கொல்கத்தா மாநகரப் பேருந்தில் ஒரு கன்டக்டர், மாநில பேருந்துகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களைதான் பணியமர்த்துவார்கள், அவர் ஒரு வங்காளி. அவ...

அரசியல் பிழைத்தோர் - 2

மதவாதத்திற்கு முடிவுகட்டுவோம்... 6 மாதங்களுக்கு முன்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலிருந்து அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு(Affiliated Colleges) ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம்  பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய 'இராஜ இராஜ சோழன்' எனும் நாடகம் இணைக்கப்படுவதாக இருந்தது அந்த சுற்றறிக்கை. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆட்சியர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது அந்த துறைத் தலைவர் தன்னை கேட்காமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பிவிட்டதாகவும் தான் அதை திரும்பப்பெறுவதாகவும் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகமே பாடத்திட்டத்தில் தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்சியர், பாடத்திட்டத்தில் மாற்றம் என்பது அகாடமி கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடந்திருப்பதற்கு துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நாட்ட...

புறநகர்

அவனுக்கு தெரியாத ஊரில் எனக்கு புரியாத மொழியில் வழி கேட்டான் ஒருவன் என்னிடம் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எனக்கே தெரியாத அந்த ஊரில் அவனுக்கு புரியாத மொழியில் ‘தெரியாது’ என்று சொன்னேன் நான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எங்கள் அருகில் நகரின் பூர்வகுடி ஒருவன் எட்டு ரூபாய் பேருந்துக்காக காத்திருந்தான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது…