'பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இந்த 10% இடஒதுக்கீடு என்பது மத்திய அரசின் மிகவும் குழப்பமான சிந்தனையாகும். மேலும் பொருளாதார சமத்துவமின்மையை போக்குவதற்கான வழி இடஒதுக்கீட்டில் இல்லை, அதற்கான வழி என்பது வாய்ப்புகளை அதிகப்படுத்துவதில் இருக்கிறது. மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும். இந்த நகர்வு என்பது ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான ஆபத்தை நோக்கி நகர்த்துவதாக இருக்கிறது.' மேற்சொன்ன கருத்து இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார அறிஞரும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் கூறியது. இதில் நாம் கவனிக்க வேண்டியது இந்த பாஜக அரசு இதனை குழப்பமான சிந்தனையில் கொண்டுவரவில்லை, அவர்கள் தெளிவாகவே இதனை செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இது அடிப்படை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், உச்ச நீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டிற்கு சமூக மற்றும் கல்வி நிலையுடன் இணைந்த பொருளாதார நிலையை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டுமென்றும் பொருளாதார நிலையை மட்டுமே பிரத்யேகமாக கணக்கில் கொள்ளக்கூடாது என்றும் தீர்ப்புகள் இருக்கும் பட்சத்தில் இது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படக்கூடும் என்று தெரிந்தும் இதனை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
'ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லையே... இந்த 10% என்பது அதற்கு வெளியே ஒதுக்கியுள்ள போதிலும் எதற்காக இதனை எதிர்க்க வேண்டும்?' என்று கேட்பவர்களுக்கு இடஒதுக்கீட்டின் வரலாற்றையும் பல விளக்கங்களையும் கூற வேண்டும். இது எப்படி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஒருவிதத்திலும் உதவப் போவதில்லை என்பதை வறுமைக்கோட்டுக்கான அளவீடுகளைக் கொண்டு விளக்கியிருந்தோம். மேலும் பல விதங்களில் இது எவ்வாறான பாதிப்புகளை உருவாக்கும் என்று கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின் முதன் முதலில் இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடியினருக்கும்(SC/ST) தான் வழங்கப்பட்டது. அப்போது அதற்காக அரசியல் சட்டங்களை இயற்றியவர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர். அப்போதே இடஒதுக்கீட்டிற்கு பொருளாதாரத்தையும் அளவுகோலாக கொள்ள வேண்டுமென்று விவாதித்தனர். அப்போது அண்ணல் அம்பேத்கர் இது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான பிரதிநிதித்துவத்திற்காகவும்(Representation), அவர்களுக்கான அதிகாரமளிக்கவும்(Empowerment) கொண்டுவரப்படும் சட்டமென்றும் இதில் பொருளாதார அளவுகோலை சேர்ப்பது சரியாக இருக்காது என்றும் வாதிட்டு சட்டம் இயற்றினார். இதில் மலைவாழ் மக்கள், காடுகளில் வசிக்கும் பூர்வ குடியினர், சமுதாயத்திற்கு வெளியில் வாழ்பவர்களை பழங்குடியினர்(Scheduled Tribes) என்றும், மேலும் சமுதாயத்திற்குள் வாழும் பிற சாதியினரால் புறக்கணிக்கப்பட்ட, தீண்டத்தகாதவர்களாக கருதப்படும் ஒடுக்கப்பட்ட மக்களை அட்டவணை சாதியினர்(Scheduled Castes) என்றும் வகைப்படுத்தினார்கள். இந்த SC/ST மக்களுக்கு 1954 இல் 20% சதவீதமாக இருந்த இந்த இடஒதுக்கீட்டை 1982 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முறையே SC மற்றும் ST வகுப்பினருக்கு 15% மற்றும் 7.5% சதவீதம் சேர்த்து 22.5% சதவீதமாக உயர்த்தியது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு. அப்போது இதைத் தவிர மீதி இடங்கள் பொதுப்பட்டியலாக(Open Competition/General) இருந்தது. அதற்கு பின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான(Backward Classes) இடஒதுக்கீடு பல இன்னல்களை கடந்து அதற்கென அமைக்கப்பட்ட காலேல்கர் தலைமையிலான முதல் கமிஷன் அறிக்கை நிராகரிக்கப்பட்டு பின் 1979இல் மொரார்ஜி தேசாய் அவர்கள் பிரதமராக பதவி வகித்த ஜனதா அரசு மண்டல் என்பவர் தலைமையில் மற்றொரு கமிஷன் அமைக்கிறது. இந்த மண்டல் கமிஷன் பற்றி கூறியாக வேண்டும். இந்த கமிஷன் இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை வரையறுக்க சமூகம், கல்வி மற்றும் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டது. அதன்படி ஒரு குறிப்பிட்ட சாதியை பிற்படுத்தப்பட்டவர்களாக கருத 11 விதிகளை கணக்கில் கொண்டது. அந்த 11 விதிகள் பின்வருமாறு,
இந்த விதிகளை கொண்டு ஆராய்ந்ததில் இந்தியாவில் 3,743 சாதிகளை (2006ஆம் ஆண்டில் 5,013 சாதிகள்) உள்ளடக்கிய 52% சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக வகைப்படுத்தப்பட்டனர். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் அல்லாமல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரத்யேகமான 27% இடஒதுக்கீட்டை பரிந்துரை செய்தது மண்டல் கமிஷன். இந்த மண்டல் கமிஷனின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமலேயே 1983லிருந்து மத்தியில் இந்திரா காந்தி மற்றும் அதன் பின்னர் அமைந்த ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தது. பின் 1989இல் நடந்த தேர்தலில் மீண்டும் ஜனதா அரசு அமைந்தது. அதன் பிரதமராக வி.பி.சிங் ஆட்சியில் 1990ஆம் ஆண்டு இந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார். இது பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. சமூக நீதியின் நாயகன் என வி.பி.சிங்கை கொண்டாடினார்கள். ஆனாலும் வட இந்தியா முழுவதும் ஆங்காங்கே கலவரம் தூண்டப்பட்டு பூதாகரமாக வெடித்தது. குறிப்பாக கல்லூரிகளில் போராட்டம் வெடித்தது. அதன் உச்சகட்டமாக 'ராஜிவ் கோஸ்வாமி' என்ற டெல்லியைச் சேர்ந்த மாணவர் தீக்குளிக்க முயன்றார். இவையனைத்தும் இடஒதுக்கீடு பற்றிய புரிதலின்மையை வெளிப்படுத்தியது. அப்போதும் தென் மாநிலங்கள் அமைதியாக இந்த 27% இடஒதுக்கீட்டை அமைதியாக வரவேற்றன. ஆனால் இதனை எதிர்த்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அளவுகோலாக சாதியை கருதக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்த இடஒதுக்கீட்டிற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் 1992இல் இந்த வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் அளித்தது. அது பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இடஒதுக்கீட்டை அனுமதித்து, பிற்படுத்தப்பட்டவர்களை வகைப்படுத்த சாதியை அளவுகோலாக கருதலாம் என்று கூறியது. மேலும் எந்த இடஒதுக்கீடும் 50% சதவீதத்தை தாண்டக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது. பின் இந்த பிற்படுத்தப்பட்டவர்களில் வசதியான, அதிகாரத்தில் போதுமான பங்களித்தவர்களை இந்த இடஒதுக்கீட்டின் மூலமாக பயனடையாமல் இருக்க Creamy Layer என்ற முறை இதில் இணைக்கப்பட்டது. இது இன்றுவரை ஒரு விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது.
இப்போது இந்த 49.5% சதவீத ST, SC, மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை தவிர மீதி 50.5% பொதுப்பட்டியல்(Open Competition/General) ஆகும். இதில் எந்தப் பிரிவினரை சேர்ந்தவரும் போட்டியிடலாம். இப்போது பிரச்சினை என்னவென்றால் இந்த ST, SC, OBC பிரிவில் வராத முன்னேறிய வகுப்பில் இருக்கும் மக்களுக்கு இந்த 50.5% சதவீத இடத்தில் முழுமையாக 10% சதவீதத்தை அவர்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கியிருக்கிறார்கள். இது 1992இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நேரடியாக மீறும் செயலாகும். எந்தவித கோரிக்கையும் எழாமல், நேற்று வரை இந்த இடஒதுக்கீட்டு முறையே நாட்டில் தேவையில்லை என்றும், இடஒதுக்கீட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்தும் வந்தவர்கள் இந்த 10% இடஒதுக்கீடு மத்திய அரசு அறிவித்தவுடன் இன்று எதுவும் பேசாமல் அமைதி காக்கின்றனர். இதில் மற்றுமொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பிரதிநிதித்துவத்திற்கான(Representation) திட்டமான இடஒதுக்கீட்டில் முன்னேறிய வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை எந்தவித பாதிப்புமில்லாமல் தொடர்ந்து கொன்டே தான் இருக்கிறது. அவர்கள் இடஒதுக்கீடு என்பதை கேட்கவும் முடியாது. எனவே அவர்களுக்கென பிரத்யேகமான இடஒதுக்கீடு கொடுக்கவும் முடியாது. அதனால் தான் பொருளாதார அடிப்படை என்ற போர்வையில் இந்த 10% இடஒதுக்கீட்டை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் மற்றொரு பக்கம் மற்ற பிரிவினரின்(SC, ST, OBC) பிரதிநிதித்துவம் என்பதோ தொடர்ந்து அனைத்து அரசுத் துறைகளிலும் , கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறு இதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கேட்காமலேயே கொடுக்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு என்பது மோடி அரசு நாட்டிற்கே இழைத்த பெரும் துரோகம்.
-தொடரும்

கருத்துகள்