முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடஒதுக்கீடு - சமூக நீதிக்கான பாதை - 1

'திறமைக்கு மரியாதை இல்லை சார்... எல்லாம் கோட்டால உள்ள வந்து சிஸ்டமே பாழாகிடுச்சு', 'ரிசர்வேஷன் முறையை ஒழிச்சா மட்டுமே கரெக்டா  வரும் தம்பி', '98 மார்க் எடுத்த எனக்கு சீட் இல்ல... 90 மார்க் எடுத்த அவருக்கு  சீட்டா???', 'அவங்க அப்பா ஹெட்மாஸ்டர் அம்மா டீச்சர் அவங்க பையனுக்கு சீட்... எங்க அப்பா தொழில்தான் பன்றாரு.. ஒப்பீட்டளவில அவங்கள விட குறைவான வருமானம் தான்,  எனக்கு சீட் இல்லையா???' இட ஒதுக்கீடு தொடர்பாக இதுபோன்ற குரல்கள் ஆங்காங்கே ஒலிக்க கேட்டிருக்கிறேன். எனக்கே கூட சில வருடங்களுக்கு முன்பு வரை இட ஒதுக்கீடு குறித்த மாற்றுக் கருத்துகள் இருந்திருக்கின்றன. பின்னாளில் ஏற்பட்ட ஒரு அடிப்படை அரசியல் புரிதலாலும், ஒரு திராவிடன் என்ற முறையிலும், திராவிடக் கொள்கைகளின் மேல் அளப்பரிய பற்றுள்ளவன் என்ற முறையிலும், தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கைகளினால் ஏற்பட்ட சமூக மறுமலர்ச்சியை (Renaissance) அறிந்து கொள்ளும் முயற்சியில் இட ஒதுக்கீடு பற்றிய பார்வைகள் முற்றிலுமாக கடந்த இரு வருடங்களில்  மாறிவிட்டன.  இந்நாளில் திராவிட கொள்கைகளின் நோக்கம் பல திசைகளில் விரிவடைந்து இருந்தாலும், இது மேலும் விரிவடைய வேண்டும் என்ற தேவை இருந்தாலும், இதன் அடிப்படை 'சமூக நீதி' (Social Justice) என்பதே. திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி, ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடாக அன்று நிலவி வந்த பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தது. இங்கு தான் சமூக நீதியின் அடிப்படை தொடங்குகிறது. இது ஒரு குறிப்பிடட சமூகத்தை மட்டும் குறி வைத்து தாக்கப்படுவதாக இன்று வரை சிலரால் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அதாவது பிராமண ஆதிக்க எதிர்ப்பு என்பது சமூகத்தில் அவர்களை புறக்கணிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டது அல்ல. அது அவர்கள் பல்வேறு வகையில் செலுத்தி வந்த ஆதிக்கத்தை எதிர்த்து மட்டுமே. அந்நாளில் சமூகத்தில் எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்த பிராமணர்கள் கல்விக்கூடங்களிலும், அரசாங்க பதவிகளிலும், உயர் பதவிகளிலும், நீதித்துறையிலும் அதிகளவில் பணிபுரிந்து வந்தனர். இவ்வாறான நிலையில் எப்படி ஒரு அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான அரசாக இருக்க முடியும்? அப்படி  சாதியாக பிரித்துவைக்கப்பட்ட சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அனைத்து அரசுப் பதவிகளையும், சலுகைகளையும் அனுபவிப்பதும், வேறு சில சமூகத்தைச் சார்ந்தவர்களை தீண்டப்படாதவர்களாகவும், புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் வைக்கப்படுவது என்பது சமூக அநீதி. இதற்கு நேரெதிர் குரலாக ஒலிப்பதே சமூக நீதிக்கான குரல்.

மேற்கண்ட நிலையில் இருந்த சமுதாயத்தில் அனைவருக்கும் வாய்ப்பு சரிவர கொண்டுசேர்க்கப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதே இடஒதுக்கீடு. மக்களிடம் எதனை கொண்டுசேர்த்தால் இந்த சமூக அநீதியை களைய முடியும் என்றால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் வழியாக மட்டுமே அது முடியும் என்று வரையறுக்கப்படுகிறது, அவ்வாறு கொண்டுசெல்லும் கல்வி, வேலைவாய்ப்பு என்பது யாருக்கு போய்ச்ச்சேர வேண்டும்? அதுவரை புறக்கணிப்படடவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்தவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும். அதன் அடிப்படையில் சாதியாக பிரிந்திருக்கும் மக்களில் ஒரு சாதியினர், அவர்கள் சமூக நிலையில் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அச்சமூகத்தினர் பெற்றிருக்கும் கல்வி நிலையை கணக்கில் கொண்டும் வகைப்படுத்துவதில் தான் பழங்குடியினர்(Scheduled Tribes) என்றும் தாழ்த்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்கள்(Scheduled Castes) என்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(Other Backward Class) என்றும் பொதுப்பிரிவினர்(General) என்றும் மத்திய அரசு வகைப்படுத்துகிறது. இவ்வாறு வகைப்படுத்துதல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது. தமிழகத்தில் இதர பிற்படுத்தபட்ட வகுப்பினர்(Other Backward Classes) என்பதை இரண்டாக பிரித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(Backward Classes) என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(Most Backward Classes) என்றும், அதன் உட்பிரிவாக சீர்மரபினர்(Denotified Communities) என்றும் வழங்கப்படுகிறது.

இதில் இடஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களாக வகைப்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் அவர்களது  சமூக நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்திற்காக(Representation) ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர பொதுப்பிரிவில்(Open Category) எந்தச் சமூகத்தை சார்ந்தவர்  வேண்டுமானாலும் அந்த இடங்களை நிரப்பலாம். இவ்வாறு ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தில் தான் இன்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு 'பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு' என்ற மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. இது ஒட்டு வங்கி அரசியலுக்காக மட்டுமே கொண்டுவரப்பட்ட மசோதா என்பது ஒருபுறமிருக்க, இது அடிப்படை அரசியலமைப்புக்கே எதிரானது. ஆனாலும் இந்த இடஒதுக்கீடு கொள்கையால் மட்டுமே பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர் பாதிக்கப்படுவதாக ஒரு போலியான கருத்தை வைத்து பல காலமாக இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதுதான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட சில குரல்கள்.  அந்த குரல்களுக்கு எதிரான சமூக நீதிக் குரலாக சொல்லிக்கொள்ள விரும்புவது  'இட ஒதுக்கீடு என்பது ஏழ்மை ஒழிப்பு திட்டம் அல்ல'.


-தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எடப்பாடி பழனிச்சாமியும் இரசகுல்லா கடைக்காரரும்

இரண்டு வருடங்களுக்கு முன் 2017இல் ஒரு கல்லூரியில் நேர்காணலுக்காக கொல்கத்தா வரை செல்ல நேர்ந்தது. வங்க மொழி(பங்ளா) தெரியாது, இந்தியும் தெரியாது, தெரிந்ததெல்லாம் தமிழ் மற்றும் இந்திய ஆங்கிலம் மட்டுமே. ஒரு வாரம் அங்கு தங்க வேண்டிய சூழல், ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட பங்ளாவோ, இந்தியோ தெரியாத குறையை கொல்கத்தா எனக்கு சிரமமாக முன்னிறுத்தவில்லை. டேக்சியில் பேரம் பேசுவது தொடங்கி, பேருந்துகளில், டீ கடைகளில், உணவகங்களில், நான் நேர்காணலுக்கு சென்ற கல்வி நிறுவனத்தில், சுற்றிப் பார்க்க சென்ற இடங்களில் என எங்குமே எனக்கு பங்ளாவோ, இந்தியோ தேவைப்படவில்லை. வங்க மக்கள் என் மொழியின் காரணமாக எனக்கு எந்த குறையையும் வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இத்தனைக்கும் அவர்கள் நான் வங்க மொழி பேசுபவன் அல்ல என்பதை உணர்ந்ததும் என்னுடன் அதிகமாக உரையாட விரும்பினர் என்றே எனக்கு தோன்றியது. உதாரணமாக நான்கு நாள் நேர்காணலில் ஒரு நாள் நான் தங்கியிருந்த அறைக்கு திரும்புகையில் கொல்கத்தா மாநகரப் பேருந்தில் ஒரு கன்டக்டர், மாநில பேருந்துகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களைதான் பணியமர்த்துவார்கள், அவர் ஒரு வங்காளி. அவ...

அரசியல் பிழைத்தோர் - 2

மதவாதத்திற்கு முடிவுகட்டுவோம்... 6 மாதங்களுக்கு முன்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலிருந்து அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு(Affiliated Colleges) ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம்  பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய 'இராஜ இராஜ சோழன்' எனும் நாடகம் இணைக்கப்படுவதாக இருந்தது அந்த சுற்றறிக்கை. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆட்சியர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது அந்த துறைத் தலைவர் தன்னை கேட்காமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பிவிட்டதாகவும் தான் அதை திரும்பப்பெறுவதாகவும் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகமே பாடத்திட்டத்தில் தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்சியர், பாடத்திட்டத்தில் மாற்றம் என்பது அகாடமி கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடந்திருப்பதற்கு துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நாட்ட...

புறநகர்

அவனுக்கு தெரியாத ஊரில் எனக்கு புரியாத மொழியில் வழி கேட்டான் ஒருவன் என்னிடம் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எனக்கே தெரியாத அந்த ஊரில் அவனுக்கு புரியாத மொழியில் ‘தெரியாது’ என்று சொன்னேன் நான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எங்கள் அருகில் நகரின் பூர்வகுடி ஒருவன் எட்டு ரூபாய் பேருந்துக்காக காத்திருந்தான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது…