முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புலர்

வானில் நட்சத்திரங்களற்ற ஒரு இரவுப்பயணத்தில் கடுங்குளிரில்லை... அதனால் அருகிலிருந்த ஜன்னலை மூடத் தேவையிருக்கவில்லை... ஏனோ... இது வழக்கமான பயணமாகவும் இருக்கவில்லை... மேகங்கள் ஒளிர்ந்த அந்தக் கணத்தில் மனத்திரையில் பரவியதோ, உறைந்துபோன நினைவுகளின் படிமங்கள்... மகிழ்வான தருணங்கள் கூட நினைவுகளில் மென்சோகம் ஆகிவிடுவது ஏனோ தெரிவதில்லை... எங்கிருந்தோ திரண்ட மழை மேகங்களின் துளிகளால், படிமங்கள் உருப்பெற, ஜன்னலை அடைத்தாகிவிட்டது... நிகழ்காலத்தில் உறுதிசெய்யப்படாத என் இருப்பில், பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறேன் இரு மருங்கிலும் மரங்கள் அடர்ந்த அந்த சாலையில்... எதிர்வரும் நீ எனை நோக்கினால் சிரிப்பாய்...வேண்டாம்... எதையோ கவனிக்க திரும்பியபடி நீ, உன்னை மட்டுமே கவனித்தபடி நான், பெருங்காற்று ஒன்று அங்கே வீச, வாரிய உன் கேசங்கள் கலைந்த கணத்திலேயே காலமும் உறைந்திருக்கலாம்... பிரிவுகளில் கூட காலைப் பொழுதுகள் அழகானவை தான்... நினைவுகளால் அடைபட்ட ஜன்னலை திறக்க, தூரத்து மரங்களின் அடர்பச்சைக்கு மேல் விடிந்திருந்தது வானம்...